இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி. தினகரன் ஜாமீனில் இன்று விடுதலை

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றதை அடுத்து இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார்.

அ.தி.மு.க. பிளவுபட்டதைத் தொடர்ந்து அந்த கட்சியின் “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமி ஷன் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

பிறகு ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் நடந்தது. நேற்று நடந்த விசாரணைக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில், “இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் 38 நாட்களாக சிறையில் உள்ளார். அவரிடம் இருந்து தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு விட்டன. லஞ்சம் பெற முயன்ற தேர்தல் கமி‌ஷன் ஊழியர் யார் என்று தெரியவில்லை. எனவே டி.டி.வி.தினகரனுக்கு இனி காவல் தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாத ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இடைத்தரகர் சுகேஷ், ஹவாலா ஏஜெண்டுகள் நதுசிங், லலித்குமார் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. அவர்களை ஜூன் 5-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஜாமீன் கிடைத்ததால் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை உடனடியாக விடுவிக்க அவரது வக்கீல்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று தினகரன் விடுதலை ஆகவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல்கள் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இந்த நடைமுறைகள் இன்று மதியம் வரை நடந்தது.

இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலையாகிறார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றனர். வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றி வேல், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் பி.ஜி.ராஜேந்திரன், மேலூர் சாமி, சோழன் பழனிசாமி, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் டெல்லியில் சிறை வாசலில் உள்ளனர்.

அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். 38 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் விடுதலை ஆவதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றிரவு டி.டி.வி.தினகரன் சென்னை திரும்புவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் சென்னையிலும் அவருக்கு வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே அவர்கள் நாளை (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரனை சென்னை அழைத்து வர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வில் மீண்டும் புத்துணர்ச்சி திரும்பியுள்ளது. எங்களுக்கு அவர் தான் தலைவர். அவர் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழி நடத்துவார்.

பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இருவரையும் அ.தி.மு.க.வில் இருந்து யாராலும் நீக்க முடியாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் ஆதரவு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிரித்வி-II ஏவுகணையை ஒடிசாவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது.

பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை 9.50 மணியளவில் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

9 மீட்டர் உயரமும், ஒரு மீட்டர் தடிமனும், 4.6 கிலோ எடையும் கொண்டது இந்த ஏவுகணை. 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பிரித்வி-II ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பிரித்வி-II ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும்.

சர்வதேச சந்தையில் மோட்டோ Z2 பிளே அறிமுகம் செய்யப்பட்டது

மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ Z2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய பதிப்புகளைப் போன்றே மோட்டோ மாட்ஸ்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மோட்டோ Z2 பிளே 499 டார்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் மோட்டோ Z2 பிளே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ Z2 பிளே சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 ஆக்டாகோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, GPS/ A-GPS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் சாதனங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பழைய மோட்டோ மாட்ஸ்களும் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்.
புதிய மோட்டோ மாட்ஸ்:
மோட்டோ பவர் பேக் – 2200 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருப்பதால், ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும். இதனால் ஸ்மார்ட்போனிற்கு 16 மணி நேரத்திற்கு கூடுதல் சார்ஜ் கிடைக்கும். இதன் விலை 49.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டர்போ பவர் பேக் – 3490 எம்ஏஎச் கூடுதல் பேட்டரி மற்றும் அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 50 சதவிகித பேட்டரியை சார்ஜ் செய்திட முடியும். இதன் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டைல் ஷெல் – 39.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 என்ற விலையில் கிடைக்கிறது. இத்துடன் ஜெ.பி.எல். சவுண்டு பூஸ்ட் 2 மோட்டோ மாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிக்ஸ்டான்ட் வசதி கொண்டுள்ளது, இதன் விலை 79.99 டாலரக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ கேம் பேட் – கண்ட்ரோலர்களை கொண்டுள்ள அனைத்து கேம்களையும் இயக்கும் வசதி கொண்ட கேம்பேட் உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளுடூத் இல்லாமல் மோட்டோ மாட்ஸ் கொண்டு இணைந்து கொள்ளும். இத்துடன் 1000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ள மோட்டோ கேம் பேட் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது

தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை கொண்டு இடிக்கப்படுகிறது.
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தின. இரண்டாவது நாளாக நேற்றும் தீ சில இடங்களில் எரிந்து கொண்டு இருந்தது.
தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எதிரே மேம்பாலம் உள்ளது. பாதுகாப்பு கருதி மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்லவும் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை கொண்டு இடிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ் நோக்கி இடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவக் குழு வருகை வந்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தாமதமாகி இன்று காலை 11 மணியளவில் பணிகள் தொடங்கியுள்ளது.

விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 61’ பர்ஸ்ட் லுக்

விஜய் பிறந்தநாளில் அவர் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
‘தெறி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 100-வது படமாகும். இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவைப்போல் உடல் எடையை மாற்றும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்துக்காக அனுஷ்காவை போல் உடல் எடையை மாற்ற முயற்சி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் முறையில் சாவித்ரியின் உடம்பு அளவுக்கு குண்டாக்கவிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை உடல் எடையை கூட்டும்படி இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருந்தாராம்.

ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் சமயத்திலும் அவரது உடல் எடை கூடவே இல்லையாம். இனிமேல், வேறு நடிகையை தேடிச் செல்லமுடியாது என்று நினைத்த படக்குழு, வேறு வழியில்லை என்பதுபோல் கீர்த்தி சுரேஷை வைத்தே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இரட்டை ஜடை போட்டு படப்பிடிப்பில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சாவித்ரி சாயல் இருந்தாலும் அவரைப்போல் குண்டாக இல்லை என்றொரு கருத்து சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதனால், ‘பாகுபலி-2’ படத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக மாற்றியதுபோல, இப்படத்தில் ஒல்லியாக இருக்கும் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸை பயன்படுத்தி குண்டாக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்: கஸ்தூரி சாடல்

ஐஐடி மாணவர்கள் நடத்தி வரும் மாட்டுக்கறி திருவிழாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி

மாட்டிறைச்சி தடை குறித்து மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையாகி உள்ளது.

மாட்டுக்கறி திருவிழா நடத்தி வரும் மாணவர்களை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் கஸ்தூரி. தனது ட்விட்டர் பதிவில், “”மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது தவறான சிந்தனை. ஒரு தரப்பை புண்படுத்தி எதிர்ப்புகளை எழுப்பவே நடத்தப்பட்டுள்ளது. இப்பொது அது கிடைத்துவிட்டது. நான் இந்த கால்நடை இறைச்சிக்கான தடையை எதிர்க்கிறேன்.

ஆனால் எனது உணவுப் பழக்கம் என்னை சுற்றியிருக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் நாம் ஒன்றும் நாயகர்கள் அல்ல. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி திருவிழாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? மலிவான செயல். கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். ஐஐடியில் படித்தவர்களுக்கு வன்முறை கை கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான்: விஜயகாந்த் வாழ்த்து

இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக கருணாநிதி இன்றைக்கு இருக்கிறார் என்று திமுக தலைவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தனது 94-வது பிறந்த நாளும், சட்டப்பேரவையின் 60வது ஆண்டு விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கு இருக்கிறார் என்றால் கருணாநிதி மட்டும் தான். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கருணாநிதியின் அரசியல் அனுபவமே சில அரசியல் தலைவர்களின் வயதாக இருக்கிறது. உங்களுடைய பிறந்தநாளும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருந்து நாட்டுக்கும், மக்களுக்கும், சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

நகை புரோக்கரின் விரலை துண்டித்த கந்து வட்டி கும்பல்: போலீஸ் விசாரணை

கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்த கந்து வட்டி கும்பல் நகை புரோக்கரின் விரலை துண்டித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். நகை புரோக்கர் தொழில் செய்து வருகிறார்.
இவர் தொழில் மேம்பாட்டுக்காக கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தீபக் என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி உள்ளார்.
வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வட்டியையும் செலுத்தி இருக்கிறார். தொழில் நலிவடைந்ததால் கடந்த 5 மாதங்களாக வட்டி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்து வட்டி கும்பல் வட்டி மற்றும் அசல் சேர்த்து ரூ.3 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டி இருக்கிறார்.
ஆனால் அவ்வளவு பணத்தை ஸ்ரீனிவாசன் உடனடியாக திருப்பி கொடுக்க இயலவில்லை.
ஸ்ரீனிவாசனிடம் பணத்தை கேட்பதற்காக தீபக் தனது நண்பர் கார்த்திக் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். வால்டாக்ஸ் ரோட்டில் ஸ்ரீனிவாசனின் கடையில் சென்று பணத்தை கேட்ட போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஸ்ரீனிவாசனை காரில் கடத்தி சென்று சவுகார்பேட்டையில் உள்ள தீபக் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
மறுநாள் அங்கிருந்து மகாகவி பாரதி நகரில் உள்ள கார்த்திக்கின் வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார்கள்.
அங்கு அவர்கள் பணத்தை கேட்டு ஸ்ரீனிவாசனை தாக்கி இருக்கிறார்கள். அவரால் உடனடியாக பணத்தை திருப்பி கொடுக்க இயலாததால் அவரது சிறு விரலை வெட்டி துண்டித்துள்ளார்கள்.
அலறி துடித்த ஸ்ரீனிவாசன் அங்கிருந்து தப்பித்து யானைக்கவுனி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு நடந்த விபரங்களை சொல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த தீபக், கார்த்திக் இருவரையும் தேடி வருகிறார்கள்.

கோர்ட்டில் தடைபெற்றதால் 2 முறை இடிக்கமுடியவில்லை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டது என்றும் கோர்ட்டில் தடைபெற்றதால் 2 முறை இடிக்கமுடியவில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட விவகாரம் குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2000-ம் ஆண்டில் வணிக வளாக கட்டிடம் கட்ட சென்னை சில்க்ஸ் அனுமதி கேட்டு மனு செய்தது. தளம் மற்றும் 4 தளங்கள் கட்டுவதற்காகத்தான் அனுமதி பெற்றது. அவர்கள் அனுமதியை மீறி 8 தளங்கள் கட்டினார்கள்.
இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பணியை நிறுத்தவும் 6.7.2000-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கட்டிடத்தை இடிப்பதற்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு சி.எம்.டி.ஏ. சார்பில் நாளேடுகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடம் என்ற பெயரில் பொதுமக்கள் கவனத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த நோட்டீஸ்கள் எல்லாம் அனுப்பிய பிறகு உயர் நீதிமன்றத்தில் கட்டிட உரிமையாளர்கள் மனு செய்தார்கள். அதன் பிறகு சி.எம்.டி.ஏ. 18.8.2006-ம் ஆண்டு இடிக்கும் பணியை தொடங்கியது. உடனே அதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றார்கள். இதனால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
23.8.2006-ல் இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25-ந்தேதி மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கிடையில் 28-ந்தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்காததால் மீண்டும் 29-ந்தேதி இடிக்கும் பணி தொடங்கியது. 5, 6, 3 தளங்களிலும் இடிப்பதற்காக பெரிய ஓட்டைகள் போடப்பட்டது. அவ்வாறு இடித்தால் கட்டிடத்தின் கீழ் பகுதி உறுதித்தன்மையை பாதிக்கும் என்று கட்டிட உரிமையாளர் முறையிட்டார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் மூலம் உறுதித் தன்மை பரிசோதிக்க குழு அமைக்கப்பட்டது.
மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதப்பட்டது. கட்டிடத்தை காலி செய்யும் படி 21.5.2007-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுப்பதை தடை செய்யும் விதமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
12.8.2011-ல் ஒரு குழுவை நியமித்து தி.நகர் பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை ஆய்வு செய்து இடிப்பது தொடர்பாக அறிக்கை அனுப்பும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.எம்.டி.ஏ.யும் மாநகராட்சியும் இணைந்து ஆய்வு செய்து 86 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது.
அப்போது சென்னை சில்க்ஸ் உள்பட 25 வணிக வளாகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
1.11.2011 அன்று அனைத்து கடைகளையும் பூட்டி சீல் வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து ரெங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் ரோடு வணிகர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்கள். சுப்ரீம் கோர்ட்டு மனுதாரர்களையும் வழக்கில் சேர்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
மேலும் வணிகர்கள் முறையிட்டதாலும் பண்டிகை காலம் என்பதாலும் 6 வாரங்களுக்கு மட்டும் சீலை அகற்றும் படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 10.1.2012 அன்று சென்னை சில்க்ஸ் உள்பட 25 கடைகளின் சீல் அகற்றப்பட்டது.
இதற்கிடையே இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் பல முறை விசாரணை வந்து ஒத்தி வைக்கப்பட்டது. நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் 113-சி என்ற புதிய பிரிவு ஏற்படுத்தி 1.7.2007-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை வரை முறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டது.
இந்த புதிய பிரிவை எதிர்த்து வழக்குகள் தொடரப் பட்டு அது நிலுவையில் உள்ளது. புதிய சட்டப்பிரிவு 113-சின் விதிகளை அரசு அறிவித்த பிறகு நடவடிக்கை எடுக்கவும் என்று கோர்ட்டு சுட்டிக்காட்டியதால் சென்னை சில்க்ஸ் மீதான நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்கள்:- கட்டிடம் கட்டும் போதே அதிகாரிகள் கண்காணிப்பது கிடையாதா?
அமைச்சர் பதில்:- கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.
கே:- விபத்துக்கள் ஏற்படும் போதுதான் இப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஆனால் பல கட்டிடங்கள் விதியை மீறி இருக்கின்றன. அவைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததற்கு கோர்ட்டும் ஒரு காரணமா?
ப:- ஆமாம். கோர்ட்டுகளுக்கு சென்று சட்டப் பிரிவுகளை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு விடுகிறார்கள்.
கே:- கட்டிடங்கள் கட்டி முடித்து முழுமை அடைந்ததற்கான சான்றிதழ் கொடுத்த பிறகு தானே கடைகள் செயல்பட வேண்டும். சென்னை சில்க்ஸ் கட்டிடத்துக்கு அவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதா?
ப:- முழுமை அடைந்ததற்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. வணிக வளாகங்கள் இந்த மாதிரி விதிமுறைக்கு மாறாக கட்டிடங்களை கட்டி விட்டு வழக்கு அது இது என்று சென்று விடுகிறார்கள். புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் பணி நிறைவடைந்ததற்கான சான்றிதழ் பெறாமல் செயல்பட முடியாது. அதை நாங்கள் முறையாக கண்காணித்து வருகிறோம். உயரமான கட்டிடங்களில் புதிதாக விதிமுறை மீற முடியாது. குடியிருப்புகளில் தான் ஆங்காங்கே விதிமுறை மீறல் நடக்கிறது. அதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கே:- திராவிட கட்சிகளின் ஆட்சியில் கையூட்டு பெற்று அனுமதிக்கு புறம்பாக கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் புகார் கூறியுள்ளாரே?
ப:- அவர் அரசியல் ரீதியாக பேசுகிறார். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அது அவரது சொந்த கருத்து. எங்களை பொறுத்த வரை மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான கட்டிடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் துணைத் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உடன் இருந்தார்.