மறைந்த அப்துல் ரகுமானுக்கு நாளை மறுநாள் இறுதி சடங்கு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

இந்நிலையில், மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். திமுக மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த பற்றுடன் இருந்தவர் அப்துல் ரகுமான்.தமிழுக்கு கவிக்கு வெகுமான இருந்தவர். அவரது தமிழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஸ்டாலினை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநால் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால் கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது.

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 10 தலைவர்கள் பங்கேற்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாவ் உள்ளிட்ட 10 தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (3-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார்.
விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகிய 10 தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறுகிறார்.
கருணாநிதி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் சட்டசபை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு எதிரில் பார்வையாளர்கள் அமர மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமி உள்பட 4 பேரை கொன்ற மதம் பிடித்த யானையை பிடிக்க 4 கும்கிகள் வரவழைப்பு

 

கோவையில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்து 4 பேரை கொன்ற ஒற்றை யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
கோவையில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்து 4 பேரை கொன்ற ஒற்றை யானை தற்போது வெள்ளாளம்பாளையத்தில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் பதுங்கி உள்ளது.
யானைக்கு மதம் பிடித்ததால் தான் இவ்வாறு உயிர் பலி வாங்குவதாக கூறிய வனத்துறை அதிகாரிகள் கும்கி யானைகள் உதவியுடன் அதனை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி டாப்சிலிப் முகாமில் இருந்து ‘கலீம்’, ‘மாரியப்பன்’, சாடிவயல் முகாமில் இருந்து ‘பாரி’, ‘சுஜய்’ என மொத்தம் 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
ஒற்றை யானை நிற்கும் இடத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்களை யாரும் செல்லாத படி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ், உதவி கலெக்டர் மதுராந்தகி, மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் முகாமிட்டு யானையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கும்கி யானைகள் உதவியுடன் மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தியவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவர்கள் மனோகரன், அசோகன் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கும் போது பொது மக்கள் கூச்சல் போட்டு யானையின் மதம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அமைதிகாக்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மதம் பிடித்த யானையை கும்கி யானைகளால் பிடிக்க முடியாமல் மதம் மேலும் அதிகமாகி மீண்டும் ஊருக்கும் புகும் நிலைமை ஏற்பட்டால் யானையை சுட்டு பிடிக்க துப்பாக்கியுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை: கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை தொடர்பாக புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி கவர்னர் கிரண்பேடி அன்றாட அலுவல் பணிகளிலும் தலையிட்டு வருகிறார். அமைச்சரவை செய்ய வேண்டிய பணிகளிலும் கவர்னரே அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.
இதனால் புதுவையில் இரட்டை அரசு செயல் படுவது போன்ற ஒரு தோற்றம் உள்ளது. கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கவர்னரும் அமைச்சரவை மீது மத்திய அரசிடம் புகார் கூறி இருக்கிறார்.
இவ்வாறு இரு தரப்பினரின் மோதலும் நீடித்து வந்த நிலையில் புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் முறை கேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டு மாணவர் சேர்க்கையில் பல்வேறு மாற்றங்களை செய்தார்.
இந்த பிரச்சினையிலும் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
இந்த பிரச்சினை இன்று சட்டசபையில் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிக்கையை சமர்பித்து பேசியதாவது:-
கடந்த ஆண்டுகளில் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது. எங்களின் தொடர்விடா முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து முதல்முறையாக இந்த ஆண்டு புதுவை மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றோம்.
கடந்த 30-ந்தேதி கவர்னர் சென்டாக் அலுவலகம் சென்று அரசு ஒதுக்கீட்டு இடங்களை தனியார் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளனர் என தவறான குற்றச்சாட்டை தெரிவித்தார். சென்டாக் கன்வீனரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கும்படியும் உத்தரவிட்டார். இது முற்றிலும் சரியானதல்ல, தவறான வழிநடத்தலாகும். இந்திய அரசு, மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே எஞ்சிய இடங்கள் அகில இந்திய மாணவர் ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். இதில் மாநில அரசின் விருப்பம் ஏதும் இல்லை. நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த நடைமுறையே கடைபிடிக்கப்படுகிறது.
இப்பிரச்சினை பற்றி பேசினால் கவர்னரை விமர்சிக்க வேண்டியது வரும் என்பதால்தான் பேச விரும்பவில்லை. ஆனால் வேறு வழியின்றி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. கவர்னர் வாட்ஸ்-அப், டுவிட்டரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் ஊழல் செய்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளார்.
கவர்னருக்கு இதைச்சொல்ல எந்த அதிகாரமும் இல்லை. அவரிடம் ஆதாரம் இருந்தால் சபைக்கு கொடுத்துவிடட்டும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். ஆதாரமில்லாமல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கவர்னர் விமர்சிப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசு மீது அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசியதாவது:-
சமீபநாட்களாக கவர்னர் ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார். அதற்கு நான் பதில் கூற விரும்புகிறேன். மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த 5 மாதமாக தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்,சென்டாக் அதிகாரிகள், மாணவர் பெற்றோர் சங்கத்தினரிடம் பேசி வருகிறேன். 2 முறைடெல்லிக்கும் சென்றுள்ளேன்.
பட்டமேற்படிப்பில் முதல் முறையாக அரசு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டுபு 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.5 1/2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரையும் கல்லூரியில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.
கவர்னர் சேர்த்த மாணவர்களை சேர்க்க வேண்டியது அவர் பொறுப்பு. சென்டாக்கில் தேர்வு செய்த மாணவர்கள் அனைவரையும் இன்றே கல்லூரிக்கு நேரடியாக நானே சென்று சேர்ப்பேன்.
கவர்னர் அரசு அதிகாரிகளைப்பற்றி தவறாக பேசி வருகிறார். தலைமை செயலாளரைப்பற்றியும் விமர்சித்து வருகிறார். அவருக்கு கவர்னராக இருக்கும் தகுதியே இல்லை என்று ஆவேசமாக மேஜையை தட்டி தெரிவித்தார். இதை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் மீனவர்கள் திடீர் முற்றுகை

காசிமேட்டில் மீன் விற்பனையகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகை சிலருக்கு கிடைக்காததை கண்டித்தும், மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் வாங்கி மார்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். சில்லறை வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்கிறார்கள்.
இதே போல பொதுமக்கள் விலை குறைவாக இருப்பதால் காசிமேடு விற்பனையகத்திற்கு வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த மீன் விற்பனையகத்திற்கு பதிலாக புதிய விற்பனையகம் காசிமேட்டிலேயே வேறு இடத்தில் கட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் புதிய மீன் விற்பனையகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் புதிய விற்பனையகத்திற்கு செல்லாமல் பழைய இடத்திலேயே வியாபாரம் செய்து வருகிறார்கள்.
புதிய மீன் விற்பனையகம் உள்ள இடம் துறைமுகத்தில் இருந்து தூரத்தில் உள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கும் என்றும் அதன் அருகே எண்ணூர் நெடுஞ்சாலை இருப்பதால் மீன்களை கொண்டு வருவதற்கு இடையூறாக இருக்கும் என்றும் எனவே பழைய மீன் விற்பனையகத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் காசிமேட்டில் மீன் விற்பனையகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகை சிலருக்கு கிடைக்காததை கண்டித்தும், மீனவர்கள், வியாபாரிகள் இன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் இல்லை.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: இசாந்த ஷர்மா

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என்று இசாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: இசாந்த ஷர்மா
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் இசாந்த் ஷர்மா. இந்தியா 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது அவருக்கு ஒருநாள் அணியில் இடம்கிடைப்பதில்லை. அதேவேளையில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என்று இசாந்த ஷர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து இசாந்த் ஷர்மா கூறுகையில் ‘‘இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இங்கிலாந்து மண்ணில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முக்கியமான விஷயம் ஒவ்வொரு சூழ்நிலையில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனஉறுதி, சுய நம்பிக்கையை வைத்துள்ளனர்.

ஒவ்வொருவரும் மிகவும் நெருக்கடியான போட்டியிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பது உறுதி. இதனால் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது.

உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டெத் ஓவரில் பும்ப்ரா அபாரமாக பந்து வீசக்கூடியவர். அவரால் சிறந்த யார்க்கர் பந்தை வீச முடியும்’’ என்றார்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி. தினகரன் ஜாமீனில் இன்று விடுதலை

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றதை அடுத்து இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார்.

அ.தி.மு.க. பிளவுபட்டதைத் தொடர்ந்து அந்த கட்சியின் “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமி ஷன் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

பிறகு ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் நடந்தது. நேற்று நடந்த விசாரணைக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில், “இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் 38 நாட்களாக சிறையில் உள்ளார். அவரிடம் இருந்து தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு விட்டன. லஞ்சம் பெற முயன்ற தேர்தல் கமி‌ஷன் ஊழியர் யார் என்று தெரியவில்லை. எனவே டி.டி.வி.தினகரனுக்கு இனி காவல் தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாத ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இடைத்தரகர் சுகேஷ், ஹவாலா ஏஜெண்டுகள் நதுசிங், லலித்குமார் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. அவர்களை ஜூன் 5-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஜாமீன் கிடைத்ததால் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை உடனடியாக விடுவிக்க அவரது வக்கீல்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று தினகரன் விடுதலை ஆகவில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல்கள் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இந்த நடைமுறைகள் இன்று மதியம் வரை நடந்தது.

இன்று பிற்பகல் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலையாகிறார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றனர். வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றி வேல், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் பி.ஜி.ராஜேந்திரன், மேலூர் சாமி, சோழன் பழனிசாமி, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் டெல்லியில் சிறை வாசலில் உள்ளனர்.

அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். 38 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் விடுதலை ஆவதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றிரவு டி.டி.வி.தினகரன் சென்னை திரும்புவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் சென்னையிலும் அவருக்கு வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே அவர்கள் நாளை (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரனை சென்னை அழைத்து வர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வில் மீண்டும் புத்துணர்ச்சி திரும்பியுள்ளது. எங்களுக்கு அவர் தான் தலைவர். அவர் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழி நடத்துவார்.

பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இருவரையும் அ.தி.மு.க.வில் இருந்து யாராலும் நீக்க முடியாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் ஆதரவு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிரித்வி-II ஏவுகணையை ஒடிசாவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது.

பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை இன்று காலை 9.50 மணியளவில் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

9 மீட்டர் உயரமும், ஒரு மீட்டர் தடிமனும், 4.6 கிலோ எடையும் கொண்டது இந்த ஏவுகணை. 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பிரித்வி-II ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பிரித்வி-II ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும்.

சர்வதேச சந்தையில் மோட்டோ Z2 பிளே அறிமுகம் செய்யப்பட்டது

மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ Z2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய பதிப்புகளைப் போன்றே மோட்டோ மாட்ஸ்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மோட்டோ Z2 பிளே 499 டார்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் மோட்டோ Z2 பிளே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ Z2 பிளே சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 ஆக்டாகோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, GPS/ A-GPS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் சாதனங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பழைய மோட்டோ மாட்ஸ்களும் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்.
புதிய மோட்டோ மாட்ஸ்:
மோட்டோ பவர் பேக் – 2200 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருப்பதால், ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும். இதனால் ஸ்மார்ட்போனிற்கு 16 மணி நேரத்திற்கு கூடுதல் சார்ஜ் கிடைக்கும். இதன் விலை 49.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டர்போ பவர் பேக் – 3490 எம்ஏஎச் கூடுதல் பேட்டரி மற்றும் அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 50 சதவிகித பேட்டரியை சார்ஜ் செய்திட முடியும். இதன் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டைல் ஷெல் – 39.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 என்ற விலையில் கிடைக்கிறது. இத்துடன் ஜெ.பி.எல். சவுண்டு பூஸ்ட் 2 மோட்டோ மாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிக்ஸ்டான்ட் வசதி கொண்டுள்ளது, இதன் விலை 79.99 டாலரக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ கேம் பேட் – கண்ட்ரோலர்களை கொண்டுள்ள அனைத்து கேம்களையும் இயக்கும் வசதி கொண்ட கேம்பேட் உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளுடூத் இல்லாமல் மோட்டோ மாட்ஸ் கொண்டு இணைந்து கொள்ளும். இத்துடன் 1000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ள மோட்டோ கேம் பேட் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது

தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை கொண்டு இடிக்கப்படுகிறது.
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தின. இரண்டாவது நாளாக நேற்றும் தீ சில இடங்களில் எரிந்து கொண்டு இருந்தது.
தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எதிரே மேம்பாலம் உள்ளது. பாதுகாப்பு கருதி மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்லவும் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை கொண்டு இடிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ் நோக்கி இடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாகராயநகரில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவக் குழு வருகை வந்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தாமதமாகி இன்று காலை 11 மணியளவில் பணிகள் தொடங்கியுள்ளது.