83 ஆயிரம் இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு

சென்னையில் 83 ஆயிரம் இடங்களில்
டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு

தேங்காய் சிரட்டை, பாட்டில், டயர் என
8 டன் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது

சென்னை, அக். 23–

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் 83 ஆயிரத்து 808 இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் என சுமார் 8 டன் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள 15 கண்காணிப்பு அலுவலர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள், கூடுதல் மாநகர நல அலுவலர், மண்டல நல அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை பூச்சியியலாளர்கள், மலேரியா தொழிலாளர்கள் கொண்டு ஆய்வு மற்றும் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

8 லட்சம் தேவையற்ற பொருள் அகற்றம்

21–ந் தேதி அன்று கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், திரையரங்குகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் 1,965 மலேரியா தொழிலாளர்களை கொண்டு, 15 மண்டலங்களில் 609 தெருக்களில் 83,808 இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் போது, அப்பகுதிகளிலிருந்து தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் போன்ற 7.6 மெட்ரிக் டன் அளவிலான தேவையற்ற பொருட்கள் சென்னை மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டு, அவ்விடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொதுமக்களிடம் தேவையின்றி தேங்கி நிற்கும் நீரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதால், அப்பொருட்களை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், டிரம் மற்றும் பாத்திரங்கள், நீர்தொட்டிகளை மூடிவைக்கவும், மேல்நீர்தேக்கத் தொட்டிகளை அவ்வப்பொழுது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடவும் கட்டட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியினை சுகாதாரக்கேடு இல்லாத பகுதியாக மாற்றிட சென்னை மாநகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *