புதிய பேருந்து அறிமுகம்: பொங்கலுக்கு கொண்டுவர திட்டம்
சென்னை மாநகர பயணிகளின் வசதிக்காக ‘எம்டிசி’க்கு சிவப்பு கலர் புதிய பேருந்து அறிமுகம்: பொங்கலுக்கு கொண்டுவர திட்டம்
சென்னையில் ‘எம்டிசி’ சார்பில் பயணிகளின் வசதிக்காக சிவப்பு கலரில் புதிய பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பொங்கல் தினத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பஸ்களில் கதவுகள் முறையாக இயங்காதது, பிரேக் பிரச்னை, இன்ஜின் பழுது என்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், மாநகரில் இயக்கப்படுகிற பஸ்களில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது. ஓட்டுனர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
முறையாக பராமரிக்காத காரணத்தால் பஸ்சில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்னைகளை தடுக்கும் வகையில் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
இதையேற்ற நிர்வாகம் புதிய பஸ்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. அதன்படி புதிய பஸ்கள் தயாரிக்கப்பட்டு கரூர், பொள்ளாச்சி, குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பாடி கட்டும் பணி நடக்கிறது. இதில் தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடி திறக்கும் கதவுகள், இருவர் அமரக்கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன. மொத்தம் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் 160 பஸ்களில் பாடி கட்டும் பணி முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. மீதம் உளள 40 பஸ்களில் பாடி கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைந்து முடிவடைய உள்ளது. அதையடுத்து பொங்கல் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் பயணிகளும், டிரைவர்களும் சந்தித்து வந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சிறப்பம்சங்கள்?
சமீபத்தில் மத்திய அரசு பஸ்கள் தயாரிக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தது. அதில் பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதன்படியே பஸ்கள் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. தற்போது புதிதாக பாடி கட்டப்படும் பஸ்கள், இந்த ஆலோசனையின்படியே தயாரிக்கப்படுகிறது. இதில் விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் என பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.
விளம்பரம் தேடும் அதிமுகவினர்
அதிமுகவினர் அனைத்து இடங்களிலும் விளம்பரம் தேடி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை அனுப்பினர். அதில் அக்கட்சியின் விளம்பரம் இடம் பெற்றிருந்தது. இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதேபோல் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள பஸ்களில் அதிமுகவினரின் விளம்பர பலகைகளும் இடம் பெற்றிருக்கிறது.