அம்மா ஐஏஎஸ் இலவச பயிற்சி மையம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் அம்மா ஐஏஎஸ் இலவச பயிற்சி மையம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

கோவை, பிப்.3

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் புதியதாக அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வகுத்து கொடுத்த முன்னேற்ற பாதையிலே திறம்பட செயல்படுத்தி வருகின்றார். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும், கல்வியை அடிப்படையாக கொண்டே உள்ளது என்பதை அறிந்தே, மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறைக்கு அதிகளவிலான நிதியொதுக்கி திட்டங்களை வழங்கி வருகின்றார்.

அரசால் செயல்படுத்தப்படும் கல்வி வளர்ச்சி திட்டங்களால், தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. மாணவ, மாணவியர் ஒவ்வொருவர் மனதிலும், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று அவர்களின் உள் உணர்வு சொல்லும். பெற்றோர்களும், தன் மகனோ, மகளோ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.

அவர்களின் கனவை நனவாக்கிட, எனது எண்ணத்தில் உதித்ததை நிறைவேற்றும் விதமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டுமென்ற, கோவை மாவட்ட ஏழை எளிய மாணவ, மாணவியர்களின் கனவினை நனவாக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அருளாசியோடு இன்று அம்மா ஐஏஎஸ் அகெடாமி இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம்- ராமச்சந்திரா சாலை, கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகம் அருகில், இன்று முதல் துவக்கி வைக்கப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, அம்மா ஐஏஎஸ் அகெடமி நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெறுவதற்காக இங்கு முற்றிலும் இலவசப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. 2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அம்மா ஐஏஎஸ் அகெடமி-யில் உடனடியாக தொடங்கி நடத்தப்பட உள்ளன.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கான போட்டித் தேர்விற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அம்மா ஐஏஎஸ் அகெடமி நடத்தும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, இலவச பயிற்சிகள் அளிக்கப்படும்.

கோவை மாவட்டத்திலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்து சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான தகுதி குறித்து, இந்த மைத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம். இதற்கென பிரத்தேயக வலைதளம் உருவாக்கப்பட உள்ளது. தகுதியானவர்கள், கட்டாயம் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இங்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வானது, அனைத்து மாணவ, மாணவியர்களும் எளிதில் எழுதக் கூடிய வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். பெரும்பாலும் பொது அறிவுச் சார்ந்த கேள்விகளே கேட்கப்படும். மேலும் நுழைவுத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகுதியும், நிறைந்த அனுபவமும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களால் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 500 மாணவ, மாணவியர்களுக்கு குறையாமல் இந்த மையத்தில் இலவச பயிற்சி பெறுவர். ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவினை நனவாக்கிக் கொள்ள அனைவரையும வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஒ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, கலெக்டர் (பொ) துரை ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சமூக ஆர்வலர் அன்பரசன், ஆலயம் பவுண்டேசன் நிர்வாகத்தினர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *