தமிழிசையினை மீட்டெடுக்க வேண்டும்…!
தமிழிசையினை மீட்டெடுக்க வேண்டும்…!
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 4, திங்கள் கிழமை அன்று டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அறக்கட்டளைச் சொற்பொழிவினை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. மாதவி அவர்கள் உலா இலக்கியங்களும் நடனமும் எனும் பொருண்மையில் நிகழ்த்தினார்.
பாடலுக்கேற்ற இசையும் அதற்கேற்ற நடனங்களையும் நிகழ்த்துவது பண்டைய காலம் முதலே தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகின்றது. இருப்பினும் தமிழ் மொழி எப்படி பல்வேறு காலகட்டங்களில் அன்னிய மொழிகளின் தாக்கத்திற்கு உள்ளானதோ அதேபோல தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்ப் பாடலுக்கு இசை அமைத்து பாடுவது, தமிழிசையினை அரங்கேற்றம் செய்வது ஒரு குற்றமாகவே பார்க்கப்பட்டது. இப்படி தமிழிசையினை அரங்கேற்றம் செய்தவர்களை இசை சபாக்களில் இருந்து நீக்கப்பட்ட வரலாறும் உண்டு. வரலாற்றுக் காலங்களில் ஜமிந்தார்களுக்கும், மன்னர்களுக்கும் இசை நிகழ்ச்சிகள் தஞ்சாவூரை மையமிட்டு நிகழ்த்தப்பட்டன. பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் ஆங்கிலேயர்களை மகிழ்விக்க சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு சென்னைக்குப் பல இசைக் கலைஞர்கள் புலம்பெயர்ந்தனர். அப்போதெல்லாம் தமிழ்ப் பண்களுக்குத் தெலுக்குப் பாடல்களே பாடப்பட்ட நிலை இருந்து வந்தது. இத்தகைய பாடல்கள் மக்களுக்குப் புரியாத நிலையிலேயே இருந்து வந்தன.
தமிழிசைக்கு ஒரு எழுச்சி என்றால் அது இருபதாம் நூற்றாண்டில் அப்ரகாம் பண்டிதர், திரு.ரா.க. சண்முகம் செட்டியார் ஆகியோரால் ஏற்பட்டது என்று கூறலாம். சென்னையில் தமிழ் இசை சங்கம் அமைத்து தமிழ்ப் பாடல்களுக்கு இசை அமைத்து பாடும் முறையும் அதற்கேற்ப நடனங்களையும் அரங்கேற்றம் செய்யும் கலையும் படிப்படியாக அக்காலத்தில் வளர்ந்து வந்தது. தற்போது தமிழிசைக்கு மீண்டும் உலகம் முழுவதும் ஒரு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இன்று பல்வேறு நாடுகளில் திருவாசகம், தேவாரம், உலா இலக்கியங்களுக்கும் இசை அமைத்து அதற்கேற்ற நடனங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்று சென்னை, இசைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனாட்சி அவர்கள் கூறினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு இந்த ஆண்டு உலகத் தமிழிசை மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் அருட்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.