1652 கோடி செலவில் கோவையில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு

1652 கோடி செலவில் கோவையில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு

அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோவை, பிப்.6

கோவை வையம்பாளையத்தில் இன்று நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அத்திகடவு அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் அமைப்பாக 1966ம் ஆண்டு கோவை வடக்கு தாலுக்கா விவசாயிகள் சங்கம் என்ற ஒரு சங்கம் வேலப்பனை தலைவராகவும், நாராயணசாமி நாயுடுவை செயலாளராகவும் கொண்டு துவக்கப்பட்டது. பின்னர் இது கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக 1967 ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு விதை ஊன்றப்பட்ட விவசாயிகள் சங்கம், 1973 ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாக மலர்ந்து, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை பெற்றுத் தந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அய்யா நாராயணசாமி நாயுடு 1984ம் ஆண்டு அவர் மறையும் வரை தொடர்ந்து அச்சங்கத்தின் தலைவராகவே இருந்தார்.

அம்மா தான் தேர்தல் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடுவின் நினைவை போற்றும் வகையிலும் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார். மேலும் 1970 முதல் 1980 வரை பல்வேறு விவசாயப் போராட்டங்களில் உயிர் நீத்த 40 விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் உத்தரவிட்டார். இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தலைவி அம்மா.

அம்மாவின் ஆணையின்படி 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் நிலத்தில் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட மணி மண்டபத்தை ஒரு விவசாயி ஆகிய நான் இன்று திறந்து வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

‘‘அன்னமிட்ட கை, நம்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழ வைத்து” என்று புரட்சித் தலைவர் தனது பாடலின் மூலம் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் வழிவந்த அம்மாவின் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு விவசாயிகளுக்கு அரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அம்மாவினுடைய அரசு.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வேளாண்மைத் துறையில் அம்மாவின் அரசின் சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டிலே மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2016 17ம் ஆண்டில் அதிக அளவிலான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றதில், இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு வகிக்கிறது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அதாவது, கடந்த 2016 17ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து 3 ஆயிரத்து 526 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை ஒப்பளிக்கப்பட்டு, வேளாண் பெருமக்களுக்கு இழப்பீட்டத் தொகையாக வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு.

2018 19ம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.

அத்திக்கடவு & அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல்

1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க, முழுக்க மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தை துவங்குகின்ற பொழுது சில பகுதிகள் விடுபட்டிருக்கின்றன. நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மேலும் அந்த விடுபட்ட பகுதி, பகுதி 2 திட்டத்தின் மூலமாக அண்ணூர் மேற்கு பகுதி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர் உயர, இந்தத் திட்டத்திற்கும் அம்மாவின் அரசால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

2011ம் ஆண்டு முதல் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெற செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.

ஆகவே, இது மூன்றாண்டு திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 328 கோடி ரூபாய் ஒதுக்கி, நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டுகின்ற பணி துவக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு படிப்படியாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஓடைகள், நதிகள் குறுக்கே தடுப்பணை கட்டப்பட், நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயர்கின்ற சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு ஏற்படுத்தும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அம்மாவினுடைய அரசு விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, இன்றைக்கு நவீன முறையில் விவசாயத் தொழிலை மேற்கொள்ள அம்மாவினுடைய அரசால் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, சந்தை ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை அங்கே விற்பனை செய்யலாம், ஆன்-லைனிலும் விற்பனை செய்யலாம். விளைபொருட்களுக்கு குறைந்த விலை வருகின்றபொழுது பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளும் கட்டித் தரப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டு அமையவிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பல்வேறு வகையான பசுக்கள், ஆடுகள், கோழிகள், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகள் அறிந்துகொள்வதற்கும், விவசாயிகளுக்கு கூடுதலான விலை கிடைப்பதற்கும் இவ்வாராய்ச்சி மையம் பயன்படும் என்பதையும் இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா உலகப் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு மண்டபம் இங்கே திறக்கப்படும் என்று அறிவித்தபடி தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக, பிரம்மாண்டமான முறையில் கட்டி, உங்கள் அத்தனைபேரின், மேடையிலே வீற்றிருக்கின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆசியோடு, ஆதரவோடு, விவசாயப் பெருமக்களுடைய நினைவைப் போற்றுகின்ற விதத்திலே மறைந்த அய்யாவுக்கு மரியாதை செலுத்துகின்ற விதமாக புகழ்சேர்க்கின்ற விதமாக மணிமண்டபம் திறந்ததிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ், வி.கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர்கள் வேலுச்சாமி, தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *