மாணவ_மாணவிகள் அனைவரும் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
மாணவ_மாணவிகள் அனைவரும் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை, பிப்.6_
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வினா விடை புத்தகங்களையும் விலையில்லா மிதிவண்டிகளையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் , துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 520 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 396 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 215 பேருக்கும் ஆகமொத்தம் 1131 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் வினா, விடை புத்தகங்களையும் வழங்கி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவ- மாணவிகளின் உயர்வுக்காக விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், நோட்டுப்புத்தகங்கள், காலணிகள், வண்ணச்சீருடைகள் போன்ற அடுக்கடுக்கான நலத்திட்டங்களை வழங்கி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முன்னோடி மாநிலமாக திகழச் செய்தார்கள். அதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு இத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவ_மாணவிகள் இத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறவும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மாநகர கல்வி அலுவலர் (பொ) ஆர்.ரவி, ஆலயம் அறக்கட்டளை பொறியாளர் சந்திரசேகர், உதவி தலைமை ஆசிரியர் சதீஸ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.