இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி மற்றும் திறனாய்வு தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது வியாழன்:21.11.2019
இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்கள் பதவிக்கான உடல் தகுதி மற்றும் திறனாய்வு தேர்வில் தகுதி பெற்ற 1282 விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் மூலமாக தேர்வு நடைபெற்று வருகிறது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 753 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 2641 விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் முதற்கட்ட உடல்தகுதி தேர்வு 06.11.2019 முதல் 08.11.2019 வரையிலும், இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெற்றது.
மேற்படி உடற்தகுதி மற்றும் உடல் திறனாய்வு தேர்வில் 209 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 1,282 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்
தகுதி பெற்ற 1282 விண்ணப்பதாரர்களுக்கும் (21.11.2019) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையில், காவல் துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.