செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி
தூத்துக்குடியில் பல்வேறு செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது – ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மீட்பு.
19.12.2019 அன்று காலை 07.45 மணிக்கு தூத்துக்குடி நாடார் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மர் நாடார் மனைவி குளோரி (வயது 75) என்பவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள அருள்மிகுநாடார் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த போது கோவில் வாசல் முன்பு வைத்து சுமார் 35 வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க நபர் பஜாஜ் பல்சர் பைக்கில் வந்து குளோரி அம்மாள் கழுத்தில் கிடந்த சுமார் ரூபாய் 4,95,000/- மதிப்புள்ள 9¾ பவுன் தங்கத்தாலி முறுக்கு செயினை பறித்து விட்டு சென்றுவிட்டான். இதுகுறித்து குளோரியா அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று (20.12.2019) ஸ்டேட் பாங்க் காலனியில் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனை செய்து வந்தபோது, அங்கு பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த மேற்படி வழக்கின் எதிரி கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த மரிய மிக்கேல் சேவியர் பிரான்சிஸ் (வயது 38) பைக்கை திருப்பி தப்பிக்க முயன்றுள்ளார்.அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குளோரியம்மாளிடமிருந்து 19¾ பவுன் செயின் பறித்ததையும்,24.03.2017 அன்று காலை தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நாராயணன் மனைவி சுப்புலட்சுமி(72) என்பவரின் கழுத்திலிருந்து ரூபாய் 75,000/- மதிப்புள்ள 5 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை பறித்து சென்றதாகவும், அதில் தான் ஆடம்பரமாக செலவழித்தது போக மீதம் 2½ பவுன் தங்க முறுக்குச் செயின் இருப்பதாகவும்,அதேபோன்று 08.07.2019 அன்று இரவு 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் 12-வது தெருவில் இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்ற பாலகிருஷ்ணன் மனைவி மல்லிகா(63) என்பவரிடமிருந்து 4 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை பறித்துச் சென்றதாகவும்,மேலும் 09.07.2019 அன்று காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மெயின் ரோடு காமராஜர் நகரில் கண்ணன் என்பவர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவன் பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் என்பவரிடம் இருந்து சுமார் ரூபாய் 12,000/- மதிப்புள்ள 3 கிராம் எடையுள்ள தங்க கமலையும்,மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி, ரெங்கநாதபுரத்தில் 18.12.2019 அன்று காலை 10.45 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் மனைவி சக்தி(47) என்பவரிடமிருந்து கவரிங் செயினை பறித்து சென்றுள்ளதையும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.பின் போலீசார் எதிரி பிரான்சிஸிடமிருந்து சுமார் ரூபாய் 6,04,500/- மதிப்புள்ள 26½ பவுன் மற்றும் 1 கிராம் எடையுள்ள தங்க செயின்களை பறிமுதல் செய்து, மேற்படி செயின் பறிப்புகளுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.