காஷ்மீரில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் பலியானவர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
காஷ்மீரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக டோகா, கிஸ்ட்வார் மற்றும் உதம்பூர் மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் படொடி-கிஸ்ட்வார் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக தடைப்பட்டது.
வெள்ளப்பெருக்கால் பல மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர் கடும் போராட்டத்திற்குபின் அவர்களை மீட்டனர். இதில் டோகா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கிஸ்ட்வார் மாவட்டத்தின் செர்ஜி பகுதியில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் 45 வயதான குன்ஜி தேவி மற்றும் அவரது 4 வயது பேரன் சாம்ராட் ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டனர். தேவியின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். சிறுவன் சாம்ராடை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், உதம்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மூன்று பேர் உடல் மீட்கப்பட்டது. அதே மாவட்டத்தின் காகோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெள்ள பாதிப்பு குறித்து டோகா மாவட்ட போலீஸ் துணை எஸ்.பி. அகமத் கூறுகையில், ’மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை உடனே சரிசெய்ய முடியாது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் போர் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும்’ என தெரிவித்தார்.