பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு தமிழக எம்.பி.க்களுடன் டெல்லி சென்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்தையும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பகல் 12.20 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து, தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று உதவிடுமாறு தமிழக அமைச்சர்கள் குழு கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோர் தமிழகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடி மற்றும் மந்திரிகளை சந்தித்து பேசிய பின் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படிக்கிறவர்கள் 4 ஆயிரம் பேர்தான். ஆனால் மாநில பாட திட்டத்தில் 5 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். .
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பிரதமர் மற்றும் சட்ட மந்திரி, சுகாதார மந்திரி, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
இதனை பரிசீலனை செய்வதாக கூறி இருக்கிறார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஆனாலும் மத்திய அரசு துறைகளை பொறுத்தவரை என்ன செய்ய முடியும் என்று பார்த்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன் என்று பிரதமர் கூறினார். மற்ற மத்திய மந்திரிகளும் தங்களால் இயன்ற அளவு ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கின்றனர். எனவே விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டது. அடுத்த ஆண்டுக்கான தேர்வை நிறுத்தி வைக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *