சீன தூதர் இந்தியாவும், சீனாவும் இணைந்து புது அத்தியாயத்தை தொடங்க வேண்டும்
புதுடெல்லி:
சீனா குடியரசின் 68வது ஆண்டுவிழாவை முன்னிட்டு டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீன தூதர் லூ ஜாஹூயி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த மாதம் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், சீன அதிபர் ஜின் பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இரு நாடுகளும் ஒத்துழைப்புடனும், சமரசத்துடனும் செயல்பட வேண்டும் என இரு தலைவர்களும் தெளிவாக கூறினர். இருதரப்பு அளவிலும், சர்வதேச அளவிலும், மண்டல ரீதியாகவும், பல முன்னேற்றங்களை இரு நாடுகளும் செய்துள்ளன. இருநாடுகளும் இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.
சீன பேராசிரியர் ஜூ பென்செங், பகவத் கீதை, சகுந்தலா, உபநிசம் போன்றவற்றை சீன மொழியில் மொழி பெயர்த்தார். பேராசிரியர் ஜூ பென்செங், போதி தர்மா, சீன புத்த மதத் துறவி பக்சியான் மற்றும் ரவிந்திரநாத் தாகூர் போன்ற ஆயிரக்கணக்கானோர் இந்திய-சீன உறவில் முக்கிய பங்காற்றியுள்ளனர். மணிக்கு 1000 முதல் 4000 கி.மீ வேகத்தில் ரயில் இயக்குவதற்கான ஆய்வை தொடங்கியுள்ளோம். சீனாவின் சமீபத்திய நான்கு கண்டுபிடிப்புகளில், இந்த அதிவேக ரயிலும் ஒன்று.
இவ்வாறு அவர் பேசினார்.