சுருண்டு விழுந்து மடியும் சிட்டுக்குருவிகள்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து மடியும் சிட்டுக்குருவிகள்_

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிட்டுக்குருவிகள் சுருண்டு விழுந்து மடிந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்டுக்குருவி என்றாலே அனைவரது மனதிலும் ஒருவித மகிழ்ச்சி பெருக்கெடுத்த காலம் உண்டு. ஆனால், இளைய தலைமுறையினரில் பலருக்கு சிட்டுக்குருவி என்றால் என்னவென்றே தெரியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு இயற்கை மாற்றத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிட்டுக்குருவி இனங்கள் அழிவின் படியில் சிக்கி சின்னா பின்னமாகி வருகின்றன. தொலைத்தொடர்பு வசதிக்காக அமைக்கப்பட்ட செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அதில் இருந்து வெளியாகும் கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சின் காரணமாக மனிதர்களே பாதிப்பிற்குள்ளாகும்போது, சிட்டுக்குருவிகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

அதன் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு பாதிக்கப்பட்டு வருவது சமூக ஆரவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு பறவையினங்கள் இருந்தாலும் சிட்டுக்குருவியை யாரும் மறந்து விட முடியாது. வீட்டின் தாழ்வாரங்களில் கூடு கட்டி வசித்து வரும் இந்த சிட்டுக்குருவிகளை கிராமப்புறங்களில் யாரும் துன்புறுத்துவதில்லை. “கீச் கீச்” என சப்தமிட்டவாறு குடும்பத்தில் ஒரு நபராக ஐக்கியமாகும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை, தொலைத்தொடர்பு வசதிக்காக பட்டிதொட்டியெங்கும் பரவிய செல்போன் கோபுரங்களால் கிராமப்புறங்களிலும் குறைந்தது.

இந்நிலையில், தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் சிட்டுக்குருவிளுக்கு புது ஆபத்து வந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மரம் மற்றும் செடி கொடிகளின் எண்ணிக்கை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காட்டு கொட்டாய்கள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்ட நிலையில் இருப்பிடத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் புகழிடத்திற்கு வழியின்றி தவியாய் தவித்து வருகின்றன. தங்குமிடம் பறிபோன நிலையில், இயற்கைக்கு மாறாக பல நாட்கள் வானில் பறந்தபடியே வாழ்க்கை நடத்தக்கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிட்டுக்குருவிகளுக்கு தற்போது சுட்டெரிக்கும் வெயில் எமனாகி வருகிறது. பல நாட்கள் பறந்து பறந்து களைத்து போன சிட்டுக்குருவிகள் பல்வேறு இடங்களில் கொத்து கொத்தாக செத்து மடிந்து வருகின்றன.

குறிப்பாக போச்சம்பள்ளி சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் செத்து கிடப்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. அதனைக்கண்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்பவர்களும் உள்ளனர். ஒரு நிமிடம் அந்த இடத்தில் நின்று இறந்து போன சிட்டுக்குருவிக்காக கண்ணீர் சிந்துபவர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட இழகிய மனம் கொண்டவர்களால் தான் இன்னும் சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவையினங்கள் அழியாமல் உள்ளன. அதன் எண்ணிக்கை குறையாத வகையில் இயற்கை அன்னையும் கருணை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *