வைரஸ் காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு.
இளையான்குடி அருகே வைரஸ் காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு.
இளையான்குடி: இளையான்குடி அருகே கொ.இடையவலசையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே இங்குள்ள மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தற்போதுவரை கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதனால் பெரும்பாலும் காவிரி குடிநீர் மூலமே கால்நடைகளின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் சேதமடைந்து திறந்த வெளியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் அசுத்தங்கள் கலந்து வருவதால் கொ.இடையவலசை பகுதி மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கை, கால், மூட்டு வலியுடன் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிக்குன்குனியா காய்ச்சலாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது. அதனால் இடையவலசை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு மற்றும் ஆய்வு செய்து வருகின்றனர். பெரும்பாலும் குடிநீர் மூலம் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் திறந்தவெளியில் உள்ள நீர்தேக்கதொட்டிகள், சேதமடைந்த காவிரி குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரியசாமி கூறியதாவது, காவிரி குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதால், சாலையில் ஓடும் கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது. அதனால் அதை பருகும் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த காவிரி குழாய்கள், தோட்டிகளை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.