நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி

கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி…மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் கோழிக்கோடு, வயலூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கி கிடந்த 1½ வயது குழந்தை ரிபா மரியம், அபினவ் (வயது 17) ஆகியோரின் உடல்களை நவீன கருவிகளின் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டனர். குழந்தை ரிபா மரியத்தின் தாய் உள்பட 6 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை கேரள மந்திரிகள் டி.பி. ராமகிருஷ்ணன், ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சென்னிதலாவும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும், மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *