அந்தமான் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – 11 ஊழியர்கள் உயிருடன் மீட்பு

இந்திய சரக்கு கப்பல் அந்தமான் கடலில் மூழ்கியது, அதில் பயணித்த 11 ஊழியர்கள் அனைவரையும் கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்.
அந்தமானில் இருந்து கொல்கத்தா நோக்கி சரக்கு கப்பல் ‘ஐ.டி.டி. பாந்தர்’ நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 29 கன்டெய்னர்கள் இருந்தன. அதில் 200 டன் இரும்பு, 500 டன் மணல், கார்கள் உள்ளிட்டவை இருந்தன.
அந்த கப்பல் வடக்கு அந்தமான் தீவு அருகே 120 நாட்டிகல் மைல் தொலைவில் மோசமான தட்பவெப்பம் காரணமாக நேற்று காலை திடீரென கடலில் மூழ்கியது. இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் 3 விமானங்களில் அங்கு மீட்புபணிக்கு சென்றனர்.
அப்போது கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி தப்பிய 11 ஊழியர்கள் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும், மூழ்கிய கப்பலை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலா சிறைக்கு வெளியே போய் தங்கி இருந்தாரா? புதிய தகவல்களால் சர்ச்சை

சசிகலா 13 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே போய் தங்கி இருந்ததாகவும் பரவி வரும் தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சிகலா 13 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே போய் தங்கி இருந்ததாகவும் பரவி வரும் தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பற்றி தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்போது அனைவருடைய புருவத்தை உயர வைக்கும் அளவுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 155 நாட்கள் ஆகிறது.
155 நாட்களில் வெறும் 13 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருந்தார் என்றும் மற்ற நாட்களில் சிறை அருகே அவரது உறவினர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. தன்னை உறவினர்கள் பார்க்க வரும் நாட்களில் மட்டும் அவர் சிறைக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பொதுவாக சிறையில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சசிகலாவை அவரது உறவினர்கள் இந்த நேரத்தை தாண்டியும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவணங்கள் டி.ஐ.ஜி. ரூபாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்களை உயர்மட்ட குழுவின் விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் ரூபா வழங்க உள்ளதாக தெரிகிறது.
வினய்குமார் முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெறும் தகவல்கள் அடிப்படையில் சசிகலாவை துமகூருவுக்கோ அல்லது மைசூரு சிறைக்கோ மாற்ற அரசு முடிவு எடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கையை அடுத்த சில நாட்களில் அரசுக்கு வினய்குமார் தாக்கல் செய்ய உள்ளார்.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையின் தலைமை சூப்பிரண்டாக கிருஷ்ணகுமாரும், சிறை சூப்பிரண்டாக அனிதாராயும் இருந்தார்கள். இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது. சிறையில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறையின் தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு பதிலாக புதிய தலைமை சூப்பிரண்டாக அனிதாராய் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவரை தலைமை சூப்பிரண்டாக நியமித்ததை கண்டித்து சிறை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அனிதாராயிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தலைமை சூப்பிரண்டாக சோமசேகர் நியமிக்கப்பட்டார்.
ஆனாலும் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக அனிதாராய் தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த அனிதாராயை அதிரடியாக கர்நாடக அரசு நேற்று பணி இடமாற்றம் செய்தது. அவர் தார்வார் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தார்வார் சிறை சூப்பிரண்டாக இருந்த ரமேஷ், பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட மேகரிக் நேற்று மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு நடத்தினார். சிறையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தியதுடன், சில கைதிகளிடமும், சிறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“கர்நாடக சிறைத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்ற பின்பு, பெங்களூரு சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினேன். சிறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவதால், அதுகுறித்தும் விசாரணை நடத்தினேன். சில கைதிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களையும், அவர்கள் சொல்லிய குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டேன்.
அதே நேரத்தில் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அவர்களிடமும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி, சில தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளேன்.
விசாரணை அதிகாரிக்கு, சிறைத்துறையின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரனுடன் வந்து இருந்த கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கும், முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர் மூலமாக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் என் மீது சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தவறானது.
எனக்கும், பரமேஸ்வருக்கும் இடையே 25 ஆண்டுகளாக நட்பு உள்ளது. ஆனால் அதை நான் பயன்படுத்தி சசிகலாவுக்கு சிறையில் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சமீபத்தில் நான் பரமேஸ்வரை சந்திக்கவே இல்லை. அவரை நான் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
இவ்வாறு வா.புகழேந்தி கூறினார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஜனாதிபதியை நேரில் சந்தித்து, நீட் தேர்வு பிரச்சினையால் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மனகுழப்பங்கள், கவலைகள் குறித்து விளக்கமாக பேசினேன். “தமிழகத்தில் 6 மாதத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. உங்கள் பதவி காலம் முடிவதற்கு முன் மத்திய அரசிடம் பேசி சட்ட மசோதாவிற்கு முழுவடிவம் தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன்.
மத்திய அரசு சட்ட மசோதாவை அனுப்பினால் நிச்சயமாக செய்வேன் என்று என்னிடம் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் பிரச்சினையால் மோசமான சூழல் உள்ளது.
இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வுகளை எழுதி உள்ளார்கள். 16 ஆயிரம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக் கிறார்கள். ஆனால் நீட் தேர்வில் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அரசிடம் உள்ள 3,372 மருத்துவ இடங்களில் 3 ஆயிரம் இடங்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் கிடைக்கும். மற்ற இடங்கள் தான் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைக் கும்.
இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் செய்யப்பட்டு உள்ள அநீதி. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி விரைவில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை. அவர் தவறாக சொல்கிறார் என்பதை ஏற்கமுடியாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 

டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 5-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷ ங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-
கடுமையான வறட்சியாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கடன் சுமை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. பலரும் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் கடன் சுமைகளை தள்ளுபடி செய்யும் வகையில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இந்த எம்.எல்.ஏ.க்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததற்காக அந்த பாவத்தை கழுவும் வகையில் விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்துகிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தினமும் தொடரும்.,
இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு தமிழக எம்.பி.க்களுடன் டெல்லி சென்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்தையும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பகல் 12.20 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து, தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று உதவிடுமாறு தமிழக அமைச்சர்கள் குழு கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோர் தமிழகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடி மற்றும் மந்திரிகளை சந்தித்து பேசிய பின் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படிக்கிறவர்கள் 4 ஆயிரம் பேர்தான். ஆனால் மாநில பாட திட்டத்தில் 5 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். .
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பிரதமர் மற்றும் சட்ட மந்திரி, சுகாதார மந்திரி, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
இதனை பரிசீலனை செய்வதாக கூறி இருக்கிறார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஆனாலும் மத்திய அரசு துறைகளை பொறுத்தவரை என்ன செய்ய முடியும் என்று பார்த்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன் என்று பிரதமர் கூறினார். மற்ற மத்திய மந்திரிகளும் தங்களால் இயன்ற அளவு ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கின்றனர். எனவே விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டது. அடுத்த ஆண்டுக்கான தேர்வை நிறுத்தி வைக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.

காஷ்மீரில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் பலியானவர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

காஷ்மீரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக டோகா, கிஸ்ட்வார் மற்றும் உதம்பூர் மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சேதமடைந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் படொடி-கிஸ்ட்வார் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக தடைப்பட்டது.
வெள்ளப்பெருக்கால் பல மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர் கடும் போராட்டத்திற்குபின் அவர்களை மீட்டனர். இதில் டோகா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கிஸ்ட்வார் மாவட்டத்தின் செர்ஜி பகுதியில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் 45 வயதான குன்ஜி தேவி மற்றும் அவரது 4 வயது பேரன் சாம்ராட் ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டனர். தேவியின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். சிறுவன் சாம்ராடை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், உதம்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மூன்று பேர் உடல் மீட்கப்பட்டது. அதே மாவட்டத்தின் காகோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெள்ள பாதிப்பு குறித்து டோகா மாவட்ட போலீஸ் துணை எஸ்.பி. அகமத் கூறுகையில், ’மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை உடனே சரிசெய்ய முடியாது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் போர் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும்’ என தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

விவசாயிகள் பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கட் கிழமை தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதல் விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டுகள், சீன விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நான்காவது நாளான இன்றும் மக்களவை தொடங்கியது முதல் விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
அவை முதலில் 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அடுத்தடுத்து இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
இதனிடையே, மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சனை, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், ஜி.எஸ்.டி வரியின் பாதிப்புகள் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தமிழக விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக தான் போராடுகிறார்கள், மாநில அரசுகளுக்கு எதிராக இல்லை என்று கூறினார்.
அதேபோல், மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
மாநிலங்களவையில் அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா குறித்து மோடி பேசாதது ஏன் என்ற கேள்விக்கு வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார்.

ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.
776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில், பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா தெரிவித்தார்.
இன்று மாலை 5 மணிக்கு, இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ராகுல்காந்தியுடன் பிரியங்காவும் சீன தூதருடன் சந்தித்த புகைப்படம் வெளியானது

ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் சீன தூதரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டு போர் பதட்டம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள சீன தூதர் லுயோ ஷாஹுயை ரகசியமாக சந்தித்து பேசினார். இந்த தகவல் வெளியே கசிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலை உருவாகி இருக்கும் நேரத்தில் அவர் ஏன் சீன தூதரை சந்தித்தார்? என்பது மர்மமாக இருந்தது.
சீன தூதரை சந்தித்ததை ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார். அவர் தனது டுவிட்டர் தளத்தில் இது சம்பந்தமாக விளக்கமும் அளித்தார்.
அதில், சீன பிரச்சினை தொடர்பாகத் தான் நான் சீன தூதரை சந்தித்தேன். இதே போல் பூட்டான் தூதரையும் சந்தித்து பேசினேன். வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினேன். எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் இந்த சந்திப்புகளை மேற்கொண்டேன் என்று கூறி இருந்தார்.
ஆனால், இப்போது ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் சீன தூதரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக புகைப்பட ஆதாரம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் சீன தூதருடன் ராகுல்காந்தி, பிரியங்கா ராபர்ட் வதேரா ஆகியோர் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இது, உண்மையான படம்தானா? அல்லது வேறு படத்துடன் மார்பிங் செய்து போலியாக படம் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. ராகுல் காந்தியுடன் பிரியங்காவும், ராபர்ட் வதேராவும் ஏன் சென்றார்கள்? என்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படம் தொடர்பாக ராகுல்காந்தி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.

அமர்நாத் யாத்திரை சென்று பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது

அமர்நாத் யாத்திரை தொடங்கி கடந்த 20 நாட்களில் 48 யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.
பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.
62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடைகிறது. பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு யாத்திரையின் இடைக்காலமான கடந்த 20 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
அதேவேளையில், யாத்திரைக்கு சென்றவர்களில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தரிசனம் முடிந்து மலைப்பாதை வழியாக இறங்கிவந்த பக்தர் ஒருவர் நேற்று மாலை மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பக்தர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனால், உடல்நிலை சார்ந்த உபாதைகளால் இந்த யாத்திரை காலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ்சின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், சாலை விபத்துகளில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை காலத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.