கொள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின

கொள்ளையர்கள் கைது :
25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின

கோவை தெற்கு மாநகரத்திற்குட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், குனியமுத்தூர், கோவைப்புதூர் பகுதிகளில் பல நாட்களாக கைவரிசையை காண்பித்து வந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பல நாட்களாக வீட்டை உடைத்து திருடும் கொள்ளை கும்பலை பிடிக்க மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி பார்வையில் தெற்கு உட்கோட்ட உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா மற்றும் உதவி ஆய்வாளர் மருதாம்பாள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கம்ருதீன், காவலர்கள் சுஜய், அசோக் விஜயகுமார் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இன்று சுகுணாபுரம் சோதனை சாவடியில் ஆய்வாளர் அமுதா மற்றும் சிறப்பு பிரிவினர் வாகன தணிக்கை செய்த போது காரில் வந்த சிலர் மீது சந்தேகம் கொண்டனர். அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் வந்த நபர்கள் மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் என்பவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது என்பதும், உடன் வந்த அருண்குமார் மணிகண்டன் திருட்டுக்கு உடந்தையாக இருந்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

மணிகண்டன் போலீஸாரிடையே கொடுத்த வாக்குமூலத்தின் படி கோவைபுதூரில் உள்ள சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் வீட்டில் கதவை உடைத்து சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் கவரிங் மற்றும் கல் வைத்த கவரிங் நகைகள் என 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்துள்ளார். அதேபோன்று வெள்ளலூர், இந்திரா நகரில் வசித்து வரும் வெங்கடாசலபதி என்பவர் வீட்டில் 13 சவரன் தங்க நகைகள் மற்றும் SWIT கார் திருடியுள்ளனர். மேலும் போத்தனூர் எல்.ஐ.சி காலனி அருகில் வித்யா ராமசாமி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகள் கொள்ளை அடித்ததிலும் தொடர்பு உள்ளது தெரியவந்தது

மேற்கண்ட மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் கோவை, பொள்ளாச்சி, கோட்டூர், திருவரும்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருந்துநகர் போன்ற மாவட்டங்களில் தங்களது கைவரிசையை காண்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடமிருந்து 16 சவரன் நகைகள், 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 2 கார்கள், மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.