பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினருக்கு தடை

பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினருக்கு தடை.

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தை நோக்கி, ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொண்டர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக, 5 மெட்ரோ ரயில் நிலையங்களை தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் வீட்டு வரவேற்பறையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகியோர் ஒரு வாரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக, இன்று மாலையில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தை நோக்கி, பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி மறுத்துள்ள போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதைத் தவிர்ப்பதற்காக, 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

பிரதமரின் வீடு நோக்கி வரும் சாலைகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பட்டேல் சவுக், உத்யோக் பவன், சென்ட்ரல் செக்ரட்டிரியேட், ஜன்பத் மற்றும் லோக் கல்யாண் மார்க் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.